×

வீரராக்கியம்- சுக்காலியூர் வரை சாலையோரம் மரங்களை வெட்டிய இடத்தில் கன்றுகள் நட வேண்டும்

கரூர், மார்ச் 17: வீரராக்கியம்- சுக்காலியூர் வரை சாலை விரிவாக்க பணிக்கு மரம் வெட்டப்பட்ட இடத்தில் புதிதாக கன்றுகள் நட வேண்டும் என்று புலியூர் பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கரூர் மாவட்டம் பால்வார்பட்டி, மணவாடி, செல்வம்நகர் உள்பட பல்வேறு பகுதி மக்கள் சார்பில் சந்திசேகரன் என்பவர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:நத்தமேடு பிரிவில் இருந்து 15 ஊர் மக்கள் கரூர்-திண்டுக்கல் சாலையை இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடந்து செல்கின்றனர். அவ்வாறு சாலையை கடந்து செல்லும் போது கரூர் நோக்கி வரும் வாகனங்களின் மீது மோதி அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகிறது.

எனவே, நத்தமேடு பிரிவுக்கு தென்புறம் வேகத்தடை அமைத்து பாதுகாப்பாக சாலையை கடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதேபோல், கத்தாளப்பட்டிபுதூர் பிரிவுக்கு தென்புற பகுதியிலும் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். புலியூர் பகுதியினர் சிலர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: வீரராக்கியம் - சுக்காலியூர் வரை சாலை விரிவாக்கம் செய்வதற்காக சாலையோரங்களில் உள்ள மரங்கள் வெட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாலையின் இருபுறமும் 2 அடி முதல் 3 அடி வரை சாலை விரிவாக்கம் செய்ய 3மீட்டர் முதல் 5மீட்டர் வரையுள்ள மரங்கள் வெட்டப்படுகிறது. ஒரு மரம் வெட்டினால் மற்றொரு கன்று நடவேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், மரம் வெட்டும் பணி மட்டுமே நடக்கிறது. வேறு எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எனவே, மரம் வெட்டிய இடத்தில் புதிதாக மரக்கன்று நடப்பட வேண்டும் என்பதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

லாலாப்பேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளி நாகராஜ் என்பவர் அளித்த மனுவில், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்தை மக்கள் நலன் கருதி வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தற்போது செயல்படாமல் உள்ள கேன்டீன், ஜெராக்ஸ் கடை ஆகியவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், கரூர் தென்கரை வாய்க்காலில் மாயனூர் முதல் லாலாப்பேட்டை வழியாக மருதூர் செல்லும் வாய்க்காலில் சிதிலமடைந்த நிலையில் உள்ள படித்துறைகளை சீரமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் கொண்ட மனுக்களை வழங்கினார். பொதுப்பாதையை மீட்க வேண்டும்: வெள்ளியணை பகுதி மக்கள் அளித்த மனு: மக்கள்குறைதீர் கூட்டத்தில் கரூர் வெள்ளியணை முத்தக்காபட்டி, திருமலைநாதன்பட்டி, கருவாட்டியூர் பகுதிகளுக்கு செல்லும் வழியில் உள்ள பொதுப்பாதையை மீட்டுத்தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Tags : road ,Sukkaliyoor ,
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...